மும்பை: எதிர்வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் அக்சர் படேலுக்கு மாற்றாக அஸ்வின் இடம் பிடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் அது குறித்து இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் அகர்க்கர் பதில் அளித்துள்ளார்.
அண்மையில் நிறைவடைந்த ஆசிய கோப்பை தொடரின் சூப்பர்-4 சுற்றில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் அக்சர் படேல் காயமடைந்தார். இறுதிப் போட்டியில் அவருக்கு மாற்றாக வாஷிங்டன் சுந்தர் களம் கண்டார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அனுபவ சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் என இருவரும் உள்ளனர்.
“அக்சர் படேலுக்கு ஏற்பட்டுள்ள காயத்தில் இருந்து அவர் விரைந்து குணம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் இடைப்பட்ட நேரத்தில் அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தரை ஆஸ்திரேலிய தொடருக்காக தேர்வு செய்துள்ளோம். இந்த தொடரில் அவர்களின் செயல்பாட்டை கருத்தில் கொள்வோம். இறுதி முடிவு அக்சரின் காயத்தை பொறுத்து சரியான நேரத்தில் எடுக்கப்படும். அவர் ஃபிட்டாக இருப்பார் என நம்புகிறோம். அப்படி இல்லாமல் மாற்று தேவை இருந்தால் அந்த வழியை பின்பற்றுவோம்” என அகர்க்கர் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடர் அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடைபெறவுள்ளது. தொடரை இந்தியா நடத்துகிறது. போட்டியில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த தொடருக்கான 15 வீரர்கள் இடம்பெற்றுள்ள இந்திய அணியில் வலது கை சுழற்பந்து வீச்சாளர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.